Friday 15 August 2014

என் இந்திய தேசமிது...


என் இந்திய தேசமிது...

பல யுத்தங்களில்,
பலர் இரத்தத்தினை சிந்திய தேசமிது!
உரிமையை நிலை நாட்ட,
உயிர்களை உரமாக்கி...
ஒற்றுமையோடு ஒருங்கிணைந்த,
உன்னத தேசமிது!

சுயமரியாதையோடு சுவாசிக்க,
சுதந்திரத்தை போராடிப் பெற்ற...
பெருமைமிகு தேசமிது!
என் இந்திய தேசமிது...

சுதந்திரத்தை முழுமையாக சுவாசிக்கிறோமா...நண்பா?
சுயமாய் சிந்திக்கிறோமா?
சுயேட்ச்சையாய் செயல் படுகிறோமா?
எந்த நாட்டினிடமும், கையேந்தி நிற்காமல் ...
எந்த நாட்டுடனும் வணிக ஒத்துழைப்பை எதிர்பார்க்காமல் ...
எந்த நாட்டிற்கும் நம் திறமையை விற்காமல் ...
நம் நாட்டின் வளர்ச்சிக்காக,நாம் அனைவரும் பாடுபடுகிறோமா?
நாடு நமக்கென்ன செய்தது என்றெண்ணாமல்...
நாம் நாட்டுக்கு என்ன செய்தோம், என்று நினைக்கிறோமா?

அரசியல் அணுகுமுறையில் சுதந்திரம்...
பொருளாதார வளர்ச்சியில் சுதந்திரம்...
விவசாய முன்னேற்றத்தில் சுதந்திரம்...
சமச்சீர்க்கல்வியில் சுதந்திரம்...
அறிவியல் ஆராய்ச்சியில் சுதந்திரம்...
தொழில்நுட்ப மேன்மையில் சுதந்திரம்...
நோய்தீர்க்க சுகாதாரத்தில் சுதந்திரம்...
விளையாட்டுகளில் ஆர்வமூட்டும் சுதந்திரம்..
கலைஞர்களை ஊக்குவிக்கும் சுதந்திரம்...
லஞ்ச,ஊழல் ஒழிப்பில் சுதந்திரம்...
காவல்,இராணுவத்தை கௌரவிக்கும் சுதந்திரம்...
கலாச்சார தனித்துவ சுதந்திரம்...
ஒவ்வொரு துறையிலும் முறைக்கேடற்ற...
முறையான முயற்சியின் சுதந்திரம்...
அனைத்தையும் பெற்று விட்டோமா?

ஒவ்வொரு தனி மனிதனுக்கும்...
உண்ண உணவு,உடுத்த உடை,தங்க இருப்பிடம்,
வேலையற்றோர்க்கு வேலை வாய்ப்பு,
தொழில் முனைவோர்க்கு தொழில் வசதி வாய்ப்பு,
தருவிக்கும் நிலையை அடைந்து விட்டோமா?

கொலை,கொள்ளை,கற்பழிப்பில்லாத..
அநியாயம்,அக்கிரமம்,அநீதியில்லாத...
ஏற்ற தாழ்வு பாகுபாடில்லாத...
சாதி மத, சச்சரவில்லாத...
சுயநலமில்லாச் சமுதாயத்தை செதுக்கிவிட்டோமா?

ஒவ்வொரு சுதந்திரத்தினத்தன்றும்...
சுதந்திரக் கொடியேற்றி,
இனிப்பைச் சுவைத்துவிட்டு...
விடுமுறையை மட்டும்,
கொண்டாடி மகிழ்கிறோமா?
சிந்திப்போமா?

என் இந்திய தேசமிது...
என் மூச்சிற்க்கும் பேச்சிற்க்கும் வித்திட்ட பூமியிது ...
என் தேசத்தை நான் நேசிக்கும் நேரமிது!

ஜெய் ஹிந்!




ரோஜா மீரான்.Roja Meeran)

No comments:

Post a Comment